Saturday, June 23, 2012

மரங்களின் சமாதி!


அந்த ஒற்றை வேம்பிடம் கேட்டேன்,

“பால்யத்தில் என் சகோதரியுடன்
பள்ளி பேருந்துக்காக நான் காத்திருந்த அந்த
புங்கை மரம் எங்கே?

பள்ளி விடுமுறை நாட்களில்
அம்மாச்சியுடன் நான் வேப்பம்பழம் பொருக்கிய
வேப்ப மரங்கள் எங்கே?

கிட்ட போகாத டா முனி இருக்கு என்று
நண்பன் பயமுறுத்திய
பனை மரங்கள் எங்கே?

எனக்கும் அவளுக்குமான முதல் சந்திப்புக்கும்
பின்னர் தினமும் நடந்த சம்பாஷணைகளுக்கும்
நிழல் தந்த அந்த
வரிசை புளிய மரங்கள் எங்கே?

உங்கள் வேர்களை தழுவிச் சென்ற
மழை நீர் கால்வாய் எங்கே?”

“சாலை விரிவாக்கம் என்ற பெயரில் எங்களை
வேரறுத்து தார் இட்டு மொழுகி சமாதி கட்டிவிட்டார்கள்
இந்த மூடமனிதர்கள்” -யாருமறியாமல் பிசினாக கசிந்தது
அந்த வேம்பின் கண்ணீர் குரல்!!

யாருமற்ற இந்த சாலையில் கண்ணீருடன் கையசைக்கும்
என்னை அந்த மூடர்கள் பைத்தியம் என்று எண்ணக் கூடும்
ஆனால் அது உன் நண்பர்களுக்கு நான் செலுத்தும் அஞ்சலி
என்பது உனக்கு மட்டும் புரிந்தால் போதும்….

- அழகு. வினோதன்


சுமார் 18 ஆண்டுகளாக நாங்கள் குடும்பத்துடன் குடியிருப்பது நாகமலை (மதுரையிலிருந்து 9 கிமி). 
மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஊர். இருமருங்கிலும் பசுமை பந்தல் அமைத்தை போன்று மரங்கள் அடர்ந்த சாலை அது.
மூன்று மாதங்கள் கழித்து சென்னையிலிருந்து வீட்டிற்கு வந்த எனக்கு பேரதிர்ச்சி. 
சாலை விரிவாக்கம் என்ற பெயரில் இருந்த அத்தனை மரங்களையும் வெட்டி சாய்த்து நான்கு வழிச்சாலை அமைத்திருந்தார்கள்!! 
என் சிறுவயது முதல் பார்த்து வளர்ந்த மரங்கள் அனைத்தும் காவு கொடுக்கப் பட்டு விட்டன :( :( அந்த பாதிப்பே இந்த கவிதை!!